×

ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வெற்றி எவ்வளவு?..மாநகராட்சிகளில் கோட்டை விட்ட தேமுதிக; பேரூராட்சிகளில் மட்டுமே வென்ற நாம் தமிழர் கட்சி

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கு போட்டியிட்டு  ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வெற்றி  எவ்வளவு என்பது  தெரிய வந்துள்ளது. இந்த தேர்தலில் மாநகராட்சிகளில் ஒரு வார்டை கூட தேமுதிக பெறவில்லை. அதேபோன்று நாம் தமிழர் கட்சியும் பேரூராட்சிகளில் மட்டுமே 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 1,373 மாநகராட்சி வார்டுகளுக்கும், 3842 நகராட்சி வார்டுகளுக்கும், 7603 பேரூராட்சி வார்டுகளுக்கு  மட்டுமே தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளும், அதேபோன்று அதிமுக கூட்டணியில் தமாகா, புரட்சி பாரதம், சமூக சமத்துவ படை உள்ளிட்ட கட்சிகள் உடன் அமைத்து போட்டியிட்டன. பாஜ, தேமுதிக, பாமக, நாம்தமிழர், மநீம  உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்,  திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 73 வார்டுகளிலும், மதிமுக  21 மாநகராட்சி வார்டுகளிலும் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 13 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 24 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 16 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜ 22 வார்டுகளிலும், பாமக 5 மாநகராட்சி வார்டுகளிலும், அமமுக 3 வார்டுகளிலும், எஸ்டிபிஐ 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக, நாம் தமிழர்  கட்சி  ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதேபோன்று நகராட்சிகளில் காங்கிரஸ் 151 வார்டுகளிலும், மதிமுக 34 வார்டுகளிலும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 19 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 41 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 26 வார்டுகளிலும்,  இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் 33 வார்டுகளிலும்,  மனிதநேய மக்கள் கட்சி 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தனித்து போட்டியிட்ட  பாஜ 56 இடங்களிலும் பாமக 48 வார்டுகளிலும்,  அமமுக 33 வார்டுகளிலும், தேமுதிக 12 இடங்களிலும், எஸ்டிபிஐ  5 வார்டுகளிலும்,  பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 2 வார்டுகளிலும், புதிய தமிழகம், மனித நேய ஜனநாயக கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. நாம்தமிழர் கட்சி ஒரு வார்டை கூட பிடிக்கவில்லை.

மேலும் பேரூராட்சிகளில் காங்கிரஸ் 368 வார்டுகளிலும் மதிமுக 34 வார்டுகளிலும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி 51 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் 101  வார்டுகளிலும்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 12 வார்டுகளிலும், மமக 13 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  தனித்து போட்டியிட்ட பாஜ 230 இடங்களிலும்,  பாமக 73 வார்டுகளிலும், அமமுக 66 வார்டுகளிலும், தேமுதிக 23 வார்டுகளிலும், எஸ்டிபிஐ 16 வார்டுகளிலும்,  நாம் தமிழர் கட்சி 6 வார்டுகளிலும், புதிய தமிழகம் 3 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் தேமுதிக, பாமக பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

Tags : Temujin ,Tamil Party , Corporation, Temutika, Peruradchi, we are the Tamil Party
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...