உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வன்னியர் 10.5% இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: ‘விகிதாச்சார அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசியலமைப்பு சட்டத்திலேயே எந்த குறிப்பீடும் இல்லை,’ என, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், ராஜீவ் தவான், நாகமுத்து, விஜயன் முக்குலத்தோர் புலிப்படை தரப்பில் ஆஜரான சஞ்சய் விஷன், ராஜராஜன் ஆகியோர் வாதத்தில் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்.

தற்போது வழங்கியுள்ள இந்த உள்ஒதுக்கீடு அரசியலமைப்பின் பிரிவு 14,15,16 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. வன்னியர் சமுதாய மக்கள் பிறருடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்பதை நியாயப்படுத்த எந்த விளக்கமும் கிடையாது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ அல்லது வசதிகளையோ செய்து தரலாம். ஆனால், உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை. மேலும், விகிதாச்சார அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கும் முறை நம் நாட்டிலேயே இல்லாத ஒன்று. இது பற்றி அரசியலமைப்பு சட்டத்திலும் எந்த குறிப்பீடும் கிடையாது. முக்கியமாக இந்திரா சஹானி வழக்கிலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், வன்னியர் சமூதாயத்தை சாதி என்றும் அதன் உட்பிரிவினரை வகுப்பினர் என்றும் கூறுவது சமத்துவத்துக்கு எதிரானது. தரவுகள் எதுவும் இல்லாமல் பாரபட்சமாக இந்த 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது என்பதால், இதில் எந்த நிவாரணமும் வழங்காமல் மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். இந்த உள்ஒதுக்கீட்டை பிரிந்துரைந்த அம்பாசங்கர், ஜனார்தனன், தணிகாச்சலம் ஆகியோர் மூன்று பேரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, குமணன் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கு அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது. இதில் போதிய தரவுகள் இல்லை என்பதற்காக அதனை நிராகரிக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: