×

மத்தியிலும், மாநிலத்திலும் பவர்புல்லாக இருந்த பாரதிய ஜனதாவுக்கு 10 மாவட்டத்தில் ஜீரோ: 0.7% வாக்குகள் மட்டுமே கூடுதலாக கிடைத்தது

சென்னை: மத்தியில் 8 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும், தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த, அதிமுகவுடன் கூட்டணியாகவும் இருந்த பாஜகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாவட்டத்தில் ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை. மேலும் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது, 0.7% வாக்குகள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிட்ட மொத்த இடங்களுடன் கடந்த 2011ம் ஆண்டு போட்டியிட்ட இடங்களை ஒப்பிடும்போது தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 0.7% அளவிற்கு மட்டுமே தனது வாக்கு வங்கியை உயர்த்தி உள்ளது. அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அதிக இடங்களை கைப்பற்றியதால், இந்த வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

 அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து தேர்தலில் போட்டியிட்ட பாஜகவால் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறமுடியவில்லை. அக்கட்சியானது 230 டவுன் பஞ்சாயத்து வார்டுகள், 56 நகராட்சி வார்டுகள் மற்றும் 22 மாநகராட்சி வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கோவையில் 82 வார்டுகளில் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது. சென்னையில் 170 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, டவுன் பஞ்சாயத்துகளில் 2.2% இடங்களைப் பெற்ற பாஜக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 3.01% இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. நகராட்சிகளில் கடந்த 2011ல் 1% ஆக இருந்த அதன் வாக்கு சதவீதம் 1.45% ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. மாநகராட்சியை பொருத்தமட்டில் 2011ல் 0.5% ஆக இருந்த வாக்கு சதவீதம் 2022ல் வெறும் 1.67% ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2011ல் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1.76% இடங்களை கைப்பற்றிய பாஜக, 2022ல் 2.4% இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதாவது 0.7% வாக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. 2011ல் மொத்தமுள்ள 12,816 இடங்களில் 226 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போதுள்ள 12,838 இடங்களில் வெறும் 308 வார்டுகளில் வென்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவின் கூட்டணியில் பாஜக இருந்தது. இந்த உள்ளாட்சிக்கு மட்டுமே தனித்துப் போட்டி என்று அறிவித்தது. மத்தியில் ஆளும் கட்சியாகவும், மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு கூட்டணியாகவும் உள்ள பாஜகவுக்கு இந்த 0.7 சதவீத வளர்ச்சி என்பது, தேய்பிறையாகவே கருதப்படுகிறது. இது வளர்ச்சியாக கருத முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Tags : Bharatiya Janata Party ,BJP , BJP, votes, urban local elections, Annamalai
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி