×

நாகர்கோவிலில் பரபரப்பு; பெண் பழ வியாபாரி மீது தாக்குதல்: சாலையில் சிதறிய கொய்யாப் பழங்கள்

நாகர்கோவில்: நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (42). நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் சாலையோரத்தில் கொய்யா பழ வியாபாரம் செய்து வருகிறார். தினமும் தனது ஊரிலிருந்து பழங்களைக் கொண்டு வந்து சாலை ஓரத்தில் அமர்ந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்தமும் அமைந்துள்ளது. இந்த நிலையில் பஞ்சவர்ணம் வியாபாரம் செய்வது அந்த பகுதியில் உள்ள சில கடைகளுக்கு இடையூறாக இருந்தது.

இதனால் தங்கள் கடைக்கு எதிரே வியாபாரம் நடத்த கூடாது என்று பஞ்சவர்ணத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து உள்ளது. இன்று காலையிலும் வழக்கம் போல் பஞ்சவர்ணம் அந்த பகுதியில் வியாபாரத்தை தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் ஸ்டூடியோ வில் இருந்தவர்கள் பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்து பழ கூடையை தள்ளிவிட்டனர். இதில் கொய்யாப்பழம் முழுவதும் சாலைகளில் கொட்டி சிதறியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் பிரச்சினை ஏற்பட்டது.

இது தொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி இருதரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சவர்ணம் கோட்டார் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். அதில் தனது பழ கூடையை தள்ளி விட்டதுடன் தன்னை சிலர் தாக்கியதாக கூறியிருக்கிறார்கள். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Nagarkovil , Nagercoil riots; Attack on female fruit vendor: Guava fruits scattered on the road
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...