பெங்களூரு: ஐகோர்ட் நீதிபதி குறித்து சர்ச்சை பதிவு வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமாரை பெங்களூரு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் குறித்து கன்னட நடிகர் சேத்தன் குமார் என்பவர் கடந்த 14ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து ெபங்களூரு காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேத்தன் குமாரின் மனைவி மேகா வெளியிட்ட பேஸ்புக் பதவில், தனது கணவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறுகையில், ‘நடிகர் சேத்தன் குமார் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சேத்தன் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், சமூகத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. விசாரணைக்கு பின்னர் சேத்தன் குமாரை கைது செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எரிச்சலூட்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.