×

மதுரை புதுமண்டபத்தில் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்-குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றம்

மதுரை : குன்னத்தூர் சத்திரத்தில் ஒதுக்கீடு செய்தும், மதுரை புதுமண்டபத்திலிருந்து மாற்றம் செய்யப்படாத 14 கடைகள் நேற்று காலை பலத்த  போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புதுமண்டபத்தில் புத்தகம், வளையல், பாசி, துணி உள்ளிட்டவைகளை விற்கும் சுமார் 300 கடைகள் உள்ளன. புதுமண்டபத்தை புதுப்பிப்பதற்காக, இந்த கடைகள் அனைத்தையும் குன்னத்தூர் சத்திரத்திற்கு இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதனையடுத்து அங்கு கடைகள் கட்டப்பட்டன. இதில், புதுமண்டபத்தில் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, புதுமண்டபத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

 இதற்கிடையே குன்னத்தூர் சத்திரத்தில் 14 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து 14 கடைகளை அங்கு மாற்றம் செய்ய, கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், சிலர் கடைகளை மாற்ற மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில், புதுமண்டபம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் 14 கடைகளை கோயில் ஊழியர்கள் அகற்றினர். இதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 வியாபாரிகள் கூறுகையில், “குன்னத்தூர் சத்திரத்தில் 14 கடைகளுக்கு மட்டுமே மின் மீட்டர் பொருத்தப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அனைத்து கடைகளுக்கும் மின்வசதி விரைந்து செய்து தர வேண்டும்’’   என்றனர்.

Tags : Madurai New Hall ,Gunnathur Inn , Madurai: Police in riot gear stormed a rally on Friday morning, removing 14 protesters from Madurai New Hall.
× RELATED மதுரை புதுமண்டப கடைகளை குன்னத்தூர்...