×

பாஜவுக்கு எதிராக அணி திரள்வது குறித்து உத்தவ், சரத் பவாருடன் சந்திரசேகரராவ் ஆலோசனை: ஒன்றிய அரசு மீது கடும் குற்றச்சாட்டு

மும்பை: பாஜவுக்கு எதிரான ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை ஒன்றிணைத்து அணி திரட்டுவதற்காக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மும்பைக்கு நேற்று வந்தார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோருடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த, ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை இணைத்து வலுவான எதிரணியை உருவாக்க, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார்.

சந்திரசேகர ராவ் மும்பைக்கு நேற்று வந்தார். முதல்வர் உத்தவ் தாக்கரேயை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. மகாராஷ்டிரா அமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பிரகாஷ் ராஜூம் சந்திரசேகரராவுடன் வந்திருந்தார்.
 ஆலோசனைக்கு பின்னர் முதல்வர்கள் உத்தவ் தாக்கரே, சந்திரசேகரராவ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய பிராந்திய மற்றும் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து பணியாற்றுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இன்றைய நிலையில் நாட்டில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இந்துத்துவமும் இல்லை இந்திய கலாச்சாரமும் இல்லை. இந்த நிலைமை தொடரக் கூடாது. கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். இதே நிலைமை நீடித்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்?. இது பற்றித்தான் தெலங்கானா முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது’ என்றார்.

 தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறுகையில், ‘‘நாட்டின் அரசியலில் கண்டிப்பாக மாற்றம் தேவை என்பதை நானும் மகாராஷ்டிரா முதல் அமைச்சரும் ஒப்புகொண்டுள்ளோம். ஒன்றிய அரசு சிபிஐ , அமலாக்கத் துறை போன்ற ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். ல்லையென்றால் ஒன்றிய ஆட்சியாளர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒற்றுமையுடனும் நட்புடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதர பிராந்திய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.

ஜனநாயகத்தை காப்பாற்ற நடத்தப்படும் போராட்டத்தில் இது நல்லதொரு தொடக்கமாகும்’’ என்றார். இதன்பிறகு சந்திரசேகர ராவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு சந்திரசேகரராவ் அறித்த பேட்டியில், ‘‘‘நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்வது குறித்து சரத் பவாருடன் ஆலோசனை நடத்தினேன். நாட்டில் இதுவரை செய்யப்படாத மாற்றங்களை செய்வது பற்றியும் ஆலோசனை நடத்தினோம்’ என்றார்.



Tags : Chandrasekarao ,Uthav ,Sarat Bawar ,Baja ,Union government , BJP, Uttam, Sarabjit Pawar, Chandrasekara advised
× RELATED சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்!