×

கொரோனா பரவல் குறைந்த நிலையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்ய திட்டம்

சென்னை: கொரோனா பரவல் குறைந்த நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தாண்டு மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்ட தொடர் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றதால், பட்ஜெட் கூட்டதொடர் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தொடர் ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

இந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜனவரி 5ம் தேதி நடந்தது. இந்த கூட்டம் மீண்டும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து, ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுபடுத்தும் வகையில், கொரோனா வழிகாட்டி நெறிமுறை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டது. எனவே, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு அமைப்பது சிரமம் என்பதால், இந்தாண்டும் சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 8ம் தேதி நீட் விலக்கு கேட்டு சட்டமசோதா நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் மட்டுமே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், இந்த கூட்டத்தொடரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை வளாகத்தில் ஏற்பாடுகள் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.

எனவே, கூட்டம் நடைபெறும் வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பேரவை வளாகத்தில் கணினிகள் சரியாக இயங்குகிறதா என்பது குறித்தும், மின் சாதன பொருட்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : St. George's Castle ,Corona ,Public Works Department , Corona Spread, Fort St. George, Assembly Budget Session, Public Works
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...