கொங்கணாபுரம் சனி சந்தையில் 4 ஆயிரம் ஆடுகள் விற்பனை: ரூ.3.5 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் சனி சந்தை இன்று கூடியது. இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோயில்களில் மாசித்திருவிழா நடந்து வருவதால் இன்று சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. சேலம், தர்மபுரி, நாமக்கல்,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 ஆயிரம் ஆடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.4600 முதல் ரூ.5800 வரையும்.

20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ. 9000 முதல் ரூ. 11600 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2000 முதல் ரூ.2800 வரையும் விலை போனது. இவை தவிர 2 ஆயிரம் பந்தய சேவல், கோழிகள் விற்பனைக்கு குவிந்தது. காகம், கீரி, செங்கருப்பு, மயில, சுருளிஆகிய ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ.1000 முதல் ரூ. 3000 வரை விலைபோனது. பெங்களூர், ஓசூர் பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் பந்தய சேவல்களை வாங்கிச்சென்றனர்.  கோழி ரூ.100 முதல் ரூ.1000 வரை விலை போனது.

இவை தவிர 110 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. 60 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காய மூட்டை ரூ.800 முதல் ரூ.2400 வரையும், கிலோ தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையும் விலை போனது. சந்தையில் இன்று ரூ. 3.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: