×

மாஜி அதிமுக பெண் எம்எல்ஏவின் தம்பி புல்லட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் சதீஷ்குமார்(32). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். கடந்த ஜனவரி மாதம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி ஏரி பகுதியில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பாளையத்தை சேர்ந்த ராஜா (34), சுரேஷ் (எ)பாண்டி(29), மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் தம்பி புல்லட் ராஜா (எ) நளராஜா(41), அரவிந்தசாமி(19), ஷேக் அப்துல்லா(45), சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லி (63) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில், அம்சவல்லி தனக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கான, ரூ.37 லட்சத்தை மகன் சதீஷ்குமாரிடம் கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு தொடர்ந்து பணம் கேட்டு தாய் அம்சவல்லியிடம் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்சவல்லி ஆட்களை வைத்து சதீஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், எஸ்பி சுஜித்குமார், ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோரது பரிந்துரையின்படி, கலெக்டர் சிவராசு, புல்லட் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உத்தரவின் நகலை சிறையிலிருக்கும் புல்லட் ராஜாவிடம் போலீசார் நேற்று வழங்கினர்.

Tags : Maji High Girl ,MLA , Former AIADMK MLA's brother Bullet Raja has been charged with thuggery
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்