×

பேஸ்புக் கள்ளக்காதல் உயிருக்கு உலை வைத்தது திண்டுக்கல் பாஜ நிர்வாகியை கொன்று நெல்லை கால்வாயில் வீச்சு: ஈரோட்டில் இருந்து கடத்திய 5 பேருக்கு வலை வீச்சு

நெல்லை: பேஸ்புக்கில் மலர்ந்த கள்ளக்காதல் தகராறில் திண்டுக்கல் பாஜ நிர்வாகியை ஈரோட்டிலிருந்து காரில் கடத்தி வந்து கொலை செய்து நெல்லை அருகே  கல்லை கட்டி கால்வாயில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. அவரது உடலை மனைவி அடையாளம் காட்டினார்.  கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை அருகே முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் மூகாம்பிகை நகர் வெள்ளநீர் கால்வாயில் நேற்று காலை அழுகிய நிலையில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்தது. இது குறித்து தகவறிந்து வந்த முன்னீர்பள்ளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கால்வாயில் இறந்து கிடந்தவர் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அவரை கொலை செய்து கல்லை கட்டி கால்வாயில் வீசியது தெரியவந்தது. விசாரணையில், கொலையுண்டு கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கமநாயக்கனூரைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரியவந்தது. செந்தில்குமார் ஒன்றிய பாஜக வர்த்தக அணி துணைத் தலைவர் என்பதும், அவர் அப்பகுதியில் இரு சொகுசு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்ததும் தெரியவந்தது. செந்தில்குமாருக்கு திருமணம் முடிந்து மனைவி தனலட்சுமி, ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர்.

செந்தில்குமாருக்கும், ஒட்டன்சத்திரத்திலுள்ள சுமார் 22 வயது இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளத்தில் (முக நூல்) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இளம்பெண்ணும், செந்தில்குமாரும் அடிக்கடி சந்தித்து நேரில் பேசி வந்துள்ளனர். இதனையறிந்த இளம் பெண்ணின் உறவினர்கள் செந்தில்குமாரை கண்டித்தனர். ஆனாலும் அவர் இளம்பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் செந்தில்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதற்காக, கடந்த 14ம் தேதி ஈரோட்டிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தவாறு செந்தில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு நெல்லைக்கு செல்ல வாடகை கார் வேண்டும் என பேசியுள்ளனர். இதனை நம்பிய செந்தில்குமார் அவரது மனைவியிடம் நெல்லைக்கு வாடகைக்கு செல்வதாக செல்போனில் தெரிவித்து விட்டு புறப்பட்டுள்ளார்.  ஈரோட்டிலுள்ள விடுதிக்கு சென்று சொகுசு காரில் 5 பேரை ஏற்றிக் கொண்டு செந்தில்குமார் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். செந்தில்குமாரின் உதவியாளர் சீனிவாசனும் வழியில் காரில் ஏறிக்ெகாண்டார்.  சீனிவாசனை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நான்கு வழிச்சாலையில் வைத்து திடீரென காரில் இருந்த 5 பேரும் ஆயுதங்களை காட்டி மிரட்டி சீனிவாசனை தாக்கி கட்டாயப்படுத்தி காரில் இருந்து இறக்கி விட்டனர்.

பின்னர் அவர்கள் செந்தில்குமாரை நெல்லை முன்னீர்பள்ளம் அருகேயுள்ள கண்டித்தான்குளம் வெள்ளநீர் கால்வாய் அருகே காரில் கடத்தி வந்து கழுத்தை நெரித்து வெட்டிக் கொன்று விட்டு உடலில் கல்லை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரின் நம்பர் பிளேட்டை மாற்றம் செய்து ஈரோட்டிற்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளனர். சீனிவாசன் கொடுத்த தகவல் அடிப்படையில் ஈரோடு காவல் நிலையத்தில் கடந்த 15ம் தேதி செந்தில்குமார் மனைவி புகார் செய்தார். இதையடுத்து செந்தில்குமாரின் மனைவியை நேற்று இரவு அழைத்து வந்து உடலை காட்டியதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் செந்தில்குமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.  

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக செந்தில்குமாரை கடத்திய 5 பேரையும் கைது செய்த பின்னரே கொலை சம்பவத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என தெரிய வரும்.
இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர், செந்தில்குமாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாக உரையாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த உரையாடல் மூலம் கொலையான செந்தில்குமாருக்கும், அப்பெண்ணிற்கும் தகாத உறவு இருந்து, அதுதொடர்பாக பிரச்னை இருந்ததும் தெரிய வந்துள்ளது. தொலைபேசி உரையாடல்களை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Dindigul ,BJP ,Nellai ,Erode , Facebook fake love put the furnace to life Dindigul BJP executive killed Nellai canal range: Web range for 5 people abducted from Erode
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...