×

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அரசு பள்ளிகளுக்கு இடையே டாஸ்மாக் கடை: அகற்ற வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில், கண்டிகை கிராமத்தில் சாலையோரமாக 2 அரசு பள்ளிகளுக்கு இடையே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் அவ்வழியே மதுபிரியர்களின் அத்துமீறலால் பள்ளிக்கு சென்றுவர மாணவிகள் அச்சப்படுகின்றனர். இக்கடையை அகற்ற மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் நடுவே கண்டிகை கிராமம் உள்ளது. இங்கு சாலையோரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இதன் அருகே 300 மீட்டர் தொலைவில், வேங்கடமங்கலம் செல்லும் சாலையில் மற்றொரு அரசு உயர்நிலை பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த 2 பள்ளிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு இடையே நீண்ட காலமாக ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.

இங்கு காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், பெண்களிடம், அங்கு குடிபோதையில் தள்ளாடி நிற்கும் மதுபிரியர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள பள்ளிகளுக்கு மதுபானங்களை எடுத்து சென்று அருந்துகின்றனர். இதனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தட்டி கேட்டால், அவர்களை மதுபிரியர்கள் சரமாரி தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இங்கு மதுபிரியர்களின் அடாவடியால், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதி மாணவிகளின் பாதுகாப்பை கருதி, 2 அரசு பள்ளிகளுக்கு இடையே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Tasmag ,Vandalur-Kelambakkam road , Vandalur-Kelambakkam, School, Tasmac Store
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...