×

வாணியம்பாடி தெருக்களில் குவியும் குப்பைகள் ₹30 லட்சத்தில் கட்டப்பட்டு முடங்கிய உரக்கிடங்கு-சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் :  வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சியில் வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடக்கு உள்ளது. மேலும் 2 பகுதிகளில் குப்பை கிடங்கு மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் நிலோபர் கபில் தலா ₹30 லட்சம் மதிப்பில் திறந்து வைத்தார். ஆனால் தற்போது அந்த மையம் செயல்பாட்டுக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை. இவை அனைத்தும் எதுவும் பயன்பாட்டிற்கு வராத சூழல் நிலவுகிறது. இதனால் வாணியம்பாடி நகராட்சியில் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே ₹30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளிட்ட குப்பை கிடங்குள் செயல்பட்டால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண இயலும். மேலும் பொதுமக்கள் வீடுகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் யாரும் வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லாததால் அருகே உள்ள காலி இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் வாரப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தேங்கி சிதறி கிடக்கின்றது.மேலும் இந்த குப்பைக் கழிவுகளால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசி நோய் பரவும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. குப்பைகள் அள்ளப்படாததால் சமூக விரோதிகள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இந்த தீ மளமளவென பரவி கரும்புகையுடன் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுத்தி வருகிறது. இந்த குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அள்ளாமல் தெருவிலேயே சிதறிக்கிடப்பதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நகரப் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். காற்றுமாசு ஏற்படும் வகையில் மர்ம ஆசாமிகள் குப்பைகளை எரிப்பதால், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாணியம்பாடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தெருக்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அள்ள நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.செயல்படாத மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்படாத அலுவலகமாக உள்ளது. தோல் கழிவுகள் மற்றும் பாலாற்றில் கழிவுகள் கொட்டபட்டு அங்கு தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். இதனால் காற்று மாசுபட்டு வாணியம்பாடி, உதயேந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்….

The post வாணியம்பாடி தெருக்களில் குவியும் குப்பைகள் ₹30 லட்சத்தில் கட்டப்பட்டு முடங்கிய உரக்கிடங்கு-சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Vaneyambadi ,Vaniyambadi Municipality ,Vanyambati ,
× RELATED வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கி...