×

கணவருக்காக மணிமண்டபம்.. கணவர் இறந்த துயரில் உயிரிழந்த மனைவி: காதலர் தினத்தில் நடந்த 2 சம்பவங்கள்..!!

சேலம்: கணவன் - மனைவி இடையே ஏற்படும் சிறுபிரச்சனை கூட விவாகரத்தில் முடியும் இன்றைய காலகட்டத்தில் சேலம் ஏற்காடு பகுதியில் உயிரிழந்த கணவருக்காக மணிமண்டபம் கட்டி அவருக்கு சிலை வைத்து மனைவி வழிபட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் மத்திய சட்டக்கல்லூரி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சசிகுமார், கடந்த 2019ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சமூக பணிகளிலும், இறை பணியிலும் அதிக ஈடுபாடு கொண்ட சசிகுமாரின் உயிரிழப்பு அவரது மனைவிக்கு பேரிடியாக அமைந்தது.

கணவர் மீது அதீத பாசம் கொண்ட கோமதி, கணவருக்காக ஏதாவது செய்ய நினைத்து, வீட்டு வளாகத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்திருக்கிறார். உயர் ரக மரத்தில் கணவருக்காக மார்பளவு சிலையும் எழுப்பினார். இந்த நிலையில் காதலர் தினத்தன்று கோமதி தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களை அழைத்து அன்பு கணவரின் சிலையை திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து கணவரின் சிலைக்கு வழிபாடு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திருவாரூர் அருகே பள்ளிவாரமங்களம் கிராமத்தில் கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலர் தினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதி என ஊர்மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். உயிரிழந்த முதியவர் பக்கிரிசாமியின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் அவரது வருகைக்காக உறவினர்கள் காத்திருந்தனர். கணவர் இறந்த சோகத்தில் அழுதபடியே தவித்த சந்திரா, சில மணி நேரங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 52 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதிக்கு அவரது மகன் ஒரேநேரத்தில் இறுதிச்சடங்கு செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Manimandapam ,Valentine's Day , Husband, Manimandapam, Valentine's Day
× RELATED அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம்...