×

ஆப்கான் ராணுவத்தில் ‘பானிபட்’ படைப்பிரிவு: பாகிஸ்தான் தூண்டுதலா?

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ராணுவத்தில் ‘பானிபட்’ என்ற புதிய படைப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் விஷமத்தனம் என குற்றம்சாட்டப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான்கள் மீண்டும் அங்கு ஆட்சியை பிடித்துள்ளன. கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடக்கும் தலிபான்கள் ஆட்சியில் ஆப்கான் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆனாலும், தலிபான்கள் தங்களின் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தலிபான்கள் ராணுவத்தில் புதிதாக 1.10 லட்சம் புதிய வீரர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் பயிற்சியில் உள்ளனர்.

இதற்கிடையே, தலிபான் ராணுவத்தில் ‘பானிபட்’ எனும் புதிய படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படைப்பிரிவினர் பாகிஸ்தானை ஒட்டி உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 1761ம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலியின் படை, மராட்டிய படையை வீழ்த்தியது. அதன் நினைவாக, ‘பானிபட்’ படைப்பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது பாகிஸ்தானின் விஷமத்தனமான விளையாட்டு என சமூக வலைதளங்களில் இந்தியர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Pakistan , Panipat battalion in Afghan army: Is Pakistan instigated?
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...