×

45வது சென்னை புத்தக காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: கலைஞர் பொற்கிழி விருது வழங்குகிறார்

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்  மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகக் காட்சியை தொடங்கி  வைத்து, கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளையும் வழங்க உள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) சார்பில் 45வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது குறித்து பபாசியின் துணைத் தலைவர் மயிலவேலன் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் புத்தக காட்சியை நடத்த முடியாத சூழல் இருந்தது.

இந்த 2022ம் ஆண்டுக்கான புத்தக காட்சி பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புத்தகக் காட்சியை தொடங்கி வைக்க இருக்கிறார். அவருடன் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்கிறார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்வின்போது, கலைஞர்  மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளும், பபாசி விருதுகளும் மொத்தம் 12 பேருக்கு முதல்வர் வழங்க உள்ளார். இந்த புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இரண்டாம் நாள் நிகழ்வில் மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலைகளை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டுக்கான புத்தகக் காட்சியில் சுமார் 1000 அரங்குகள் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் 790 புத்தக அரங்குகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி, மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 10 அரங்குகள் இடம் பெறுகின்றன.

தமிழகம் மட்டும் அல்லாமல் மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லியில்  இருந்து புத்தக விற்பனையாளர்கள் இந்த காட்சியில் பங்கேற்கின்றனர். சுமார் 1 லட்சம் தலைப்புகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.
தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், மற்றும் தொல்லியல் துறை ஆகிய நிறுவனங்களும் இந்த காட்சியில் பங்கேற்கின்றன.

தொடர்ந்து 18 நாட்கள் நடக்க இருக்கும் இந்த காட்சிக்கு வருவோருக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் விலை ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 40 ஆயிரம் பேர் இந்த காட்சிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் வரும்போது அவர்களுக்கு முகக் கவசம் அணியவும், கிருமி நாசினியை பயன்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள். மேலும், இந்த காட்சியின் வளாகத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் தடுப்பூசி முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.  

வாசகர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், உணவு வசதிகள், ஓய்வு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சான்றுகளுடன் வந்தால் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். புத்தக் காட்சி நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடக்கும். மும்பை, கேரளா, கர்நாடகா, டெல்லி என  பல மாநிலங்கள் பங்கேற்கின்றன. 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்படும்

Tags : Chief Minister ,MK Stalin ,45th ,Chennai Book Fair , 45th Chennai Book Fair Chief MK Stalin begins: The artist presents the Porkizhi Award
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...