×

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம் மு.க.ஸ்டாலினுடன் மம்தா ஆலோசனை: எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாட்டை விரைவில் நடத்த திட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தொலைபேசியில் பேசினார். பாஜ அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து தன்னுடைய வேதனையை மம்தா பகிர்த்து கொண்டார்.  மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு உறுதியளித்துள்ளார். பாஜ ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்காமல் 142 நாட்கள் தாமதப்படுத்தி கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 1ம் தேதி மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் கூட்டி விவாதிக்கப்பட்டு அதில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி அதில் மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 8ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்குவங்கம், கோவா ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது, மாநில அரசுகளின் உரிமையை பறித்து அதிகார சமநிலை மீறப்படுகிறது. எனவே, நீட் தேர்வு விவகாரத்தில் அனைவரது ஒத்துழைப்பும் தேவை என குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கி வைத்து ஆளுநர் உத்தரவிட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என உறுதி தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, பாஜ அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளை பற்றியும்; அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தும் போக்கைப் பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ள உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    
* மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
* பாஜ ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அப்பட்டமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக மம்தா கருத்து.
* மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

Tags : Governors Authority ,G.C. ,KKA Mamta ,Stalin ,Opposition Casters Conference , Mamata Banerjee's consultation with MK Stalin on abuse of power by governors
× RELATED குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு...