×

9 மாதத்திற்கு பிறகு ஜமுனாமரத்தூர் திரும்பியது அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை கொம்பன் யானை-நடுரோட்டில் ‘திக் திக்’ நிமிடங்களால் பரபரப்பு

போளூர்: ஜமுனாமரத்தூர் பகுதிக்கு 9 மாதத்திற்கு பிறகு மீண்டும் திரும்பிய ஒற்றைக்கொம்பன் யானை நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் எந்த தொந்தரவும் செய்யாமல்  சிறிது நேரத்தில் யானை அமைதியாக காட்டுக்குள் சென்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர், உணவு கிடைக்காமல் ஆந்திராவிலிருந்து 12 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் முகாமிட்டது.

பின்னர் அந்த பகுதியில் உள்ள ஏராளமான குடிசை வீடுகள் மற்றும் பயிர்களை சேதமாக்கியது. அதன் பிறகு அந்த யானை கூட்டத்தில் சில யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானது.
அதைத் தொடர்ந்து சுமார் 6 யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அப்போது இந்த கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வழி தவறி சென்றது. இதனால் அந்த யானையை பிடிக்க முடியவில்லை. வயதான காராணத்தால்  கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளதால் பெரும்பாலும் இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் உள்ள காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

ஒற்றை தந்தம் கொண்டுள்ள இந்த யானையால் ஜவ்வாதுமலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜமுனாமரத்துர் சுற்றியுள்ள காட்டுபகுதியில் வலம் வந்த இந்த யானை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திடீரென மலையை விட்டு வெளியேறியது. பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் வலம் வந்த இந்த யானை அதன்பிறகு எங்கும் தென்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு ஒற்றை கொம்பன் யானை நேற்று மீண்டும் திடீரென ஜமுனாமரத்தூருக்கு வந்தது. நேற்று மாலை ஜமுனாமரத்தூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் குறைந்த பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் ஒற்றை யானை  வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பின்னர் சாலையின் நடுவே நடந்து பஸ்சின் அருகே வந்த ஒற்றை கொம்பன் யானை தும்பிக்கையை ஜன்னல் வழியே நுழைத்து பிளிறியது. இதனால் பயணிகள் முதலில் நடுங்கினர். அதன் பிறகு பஸ்சை ஒரு சுற்று சுற்றி வந்தது. ஆனால் பயணிகளை எந்த தொந்தரவும் செய்யவில்லை.

 இதனால் நிம்மதி அடைந்த பயணிகள் அந்த யானையை பல விதங்களில் செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். 15 நிமிடத்திற்கு  பிறகு அந்த யானை அமைதியாக சாலையோரத்தில் உள்ள காட்டிற்குள் சென்று மறைந்தது. அதன் பிறகு அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒற்றை யானை ஜமுனாமரத்துர் பகுதிக்கு திரும்பி உள்ளதால்  வனச்சரக அலுவலர் குணசேகரன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Jamunamarathur , Polur: A one-horned elephant, which had returned to the Jamunamarathur area after 9 months, was diverted by a government bus on Nadu Road. Thus
× RELATED தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்புவனம்...