×

சிவகங்கை மாவட்டத்தில் தேடும் நிலையில் தேமுதிக வேட்பாளர்கள்: தொண்டர்கள் கடும் ‘அப்செட்’

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் தேமுதிகவினருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில தேர்தல்களில் போட்டியிட்ட அக்கட்சியினர் கணிசமான ஓட்டு வாங்கினர். ஆனால் 2014, 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் தேமுதிகவினர் போட்டியிடவில்லை. 2016 தேர்தலுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்தில் இக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் திமுக, அதிமுகவிற்கு சென்று விட்டனர். இதனால் மாவட்ட அளவில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் யார் என்பது கூட கீழ் மட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தெரியவில்லை.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தேமுதிகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். அதன்பிறகு மீண்டும் மக்களவை தேர்தலின்போது தென்பட்டனர். ஆனால் மற்ற காலங்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் பங்களிப்பு இல்லாமல் ஒதுங்கி விட்டனர். உள்ளாட்சி தேர்தல்களிலேயே இக்கட்சியினர் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாகினர். ஏராளமானோர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக கடந்த தேர்தல்களில் போட்டியிட்டனர். பலர் தேர்வாயினர்.

 இந்நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் தேமுதிக கட்சியை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் நடக்கவுள்ள 276 இடங்களில் நகராட்சிகளில் 9 இடங்கள், பேரூராட்சிகளில் 4 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் மட்டுமே தேமுதிக வேட்பாளர்கள் நிற்கின்றனர். அனைத்து இடங்களுக்கும் போட்டியிட்ட நிலை மாறி தற்போது மிகக்குறைவான இடங்களில் போட்டியிடுவது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி தொண்டர்கள் சிலர் கூறுகையில், ‘கட்சியின் தலைமை இந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து முறையாக எந்த அறிவிப்பும், வழிகாட்டுதலும் வெளியிடவில்லை. மாவட்ட நிர்வாகிகள் என்ன முடிவு எடுத்தனர் என்று யாருக்கும் தெரியவில்லை. அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதற்கே கட்சியினருக்குள் போட்டி ஏற்பட்ட காலம் இருந்தது. ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தொண்டர்கள் தான் இதுகுறித்து அதிகம் கவலைப்படுகிறோம்’ என்றனர்.


Tags : Temujin ,Sivagangai district , In Sivagangai district While looking Temujin candidates: Volunteers 'upset'
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி