×

ரூ.2,530 கோடி வாடகை பாக்கி எதிரொலி தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடைகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடைகளுக்கு வாடகை பாக்கி வைத்திருப்போரின் கடைகள், வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள், கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாடகைதாரர்கள் சிலர், முறையாக வாடகை மற்றும் குத்தகை ெதாகையை செலுத்தவில்லை. மாறாக, அவர்கள் உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தனர். வாடகை பாக்கி வைத்திருப்போரில் பலர் முக்கிய புள்ளிகள் எனத் தெரிகிறது. இதனால், அதிமுக ஆட்சி காலத்தில் வாடகை பாக்கியை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ரூ.2,530 கோடிக்கு மேல் வாடகை பாக்கியை வசூலிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வாடகைதாரர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க உத்தரவிட்டார். மேலும், வாடகை பாக்கியை செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களை வெளியேற்றவும் ஆணையர் குமரகுருபரனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், கோயில் கடைகள், வீடுகளில் வாடகை பாக்கி தொகை வைத்திருப்போர் 15 நாட்களுக்குள் செலுத்தவும் நோட்டீஸ் அனுப்பபட்டன. அதன்பேரில், கடந்த பிப்ரவரி முதல்வாரம் வரை ஒரு சிலர் வாடகை பாக்கி தொகையை செலுத்தினர். அதே நேரத்தில், வாடகை பாக்கி வைத்திருப்போரை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அகற்ற அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன் பேரில் மாநிலம் முழுவதும் வாடகை பாக்கி வைத்திருப்போரின் கடை, வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் கன்னிமார் கோயிலுக்கு சொந்தமான 3.61 ஏக்கர் நிலம், தொட்டியனூர் கிராமத்தில் உள்ள முட்டத்து ராயர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், தத்தனூர் கிராமம் அடிபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 10.25 ஏக்கர் நிலம், கருவலூர் கிராமம் தர்மராஜா கோயிலுக்கு சொந்தமான 3.95 ஏக்கர் நிலம், தொட்டகாளம்புதூர் கிராமம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 7.32 ஏக்கர் நிலம் கோயில்களின் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சொத்தின் மதிப்பு ரூ.14.28 கோடி இருக்கும். இதே போன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி முருகன்-கணேசன் கடைக்கூடத்திற்கும், தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஜவுளிக்கடை நடத்தி வந்த பொன் சீலன் என்பவர் ரூ.55 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்டன. பண்ணப்பள்ளி மற்றும் மணவாரப்பள்ளி கிராமத்தில் உள்ள 5 கோயிலுக்கு சொந்தமான 50.5 ஏக்கர் புன்செய் நிலங்கள் மீட்கப்பட்டன. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான கடை மற்றும் கட்டிடங்களில் ரூ.5 கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் 3 கடைகளுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூவனாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 31.86 ஏக்கர் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாக்கி வைத்திருப்போரின் வீடு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில் கடந்த மாதத்தில் மட்டும் ரூ.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் ெதரிவித்தார்.

Tags : Baki Epholi ,Tamil Nadu , Rs 2,530 crore, rent, temple, seal, trust department
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...