×

பழமை வாய்ந்த கன்னிமார் கருப்பராயன் சுவாமி கோயில் இடிப்பு: அகற்றப்பட்ட கோவிலை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர கோரிக்கை

ஈரோடு: ஈரோடு கட்டபொம்மன் வீதியில் உள்ள பழமை வாய்ந்த கன்னிமார் கருப்பராயன் சுவாமி கோவிலை இடித்து, அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு கட்டபொம்மன் வீதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் பழமை வாய்ந்த ஸ்ரீ கன்னிமார் கருப்பராயன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபாட்டு வந்தனர்.

குமாரசாமி,சண்முகம் உள்ளிட்ட 5 பேருக்கு சொந்தமான நிலத்தின் அருகே இக்கோவில் அமைந்துள்ளதால், நிலங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரவோடு இரவாக கன்னிமார் கருப்பராயன் சுவாமி கோவிலை இடித்து அகற்றியதுடன், பழமை வாய்ந்த 4 கருப்பராயர்,7 கன்னிமார் கற்சிலைகளை எடுத்து அருகில் இருந்த புறம்போக்கு இடத்தில் வைத்து விட்டு அங்கு இருந்த பழமையான வேப்பமரம், பனைமரம் உள்ளிட்ட மரங்களையும் வெட்டி அகற்றப்பட்டுள்ளதால், பரபரப்பு நிலவியது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென திரண்டதால், கோவிலை அகற்றும் பணியை கைவிட்டு குமாரசாமியின் ஆட்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அகற்றப்பட்ட கோவிலை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டுமெனவும், அகற்றப்பட்ட கற்சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.      


Tags : Karuparayan Swami Temple , Ancient, temple, demolition, same place, request
× RELATED திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்