×

வரையாடுகளின் இனப்பெருக்கத்திற்காக மூணாறு ராஜமலை வனசாலை அடைப்பு: வனத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை

மூணாறு: அரியவகை வரையாடுகளின் இனப்பெருக்கத்திற்காக மூணாறு ராஜமலை வனசாலை அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் செல்ல 2 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2,000- க்கும் குறைவான வரையாடுகளே உள்ள நிலையில் அவற்றில் பாதி சதவீத வரையாடுகள், கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாரின் எரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உட்பட்ட ராஜமலை பகுதியில் உள்ளன. புலி, சிறுத்தையிடம் இருந்து குட்டிகளை பாதுகாப்பதற்காக அடர்ந்த புல்வெளிகளுக்கு உள்ளேயும், பாறை இடுக்குகளுக்கு இடையேயும் வரையாடுகள் குட்டிகளை பிரசவிக்கின்றன.

ஆனாலும் அமைதியான சூழல் இல்லாத காரணத்தால் 40% குட்டிகளே உயிர்பிழைக்கின்றன. 7 குட்டிகள் வரை பிரசவிக்கும் நிலையில் 2 அல்லது 3 குட்டிகளே உயிர்பிழைக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜமலையில் 95 குட்டிகள் பிரசவிக்கப்பட்டது கணக்கிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு கொரோனா தடைக்காலம் என்பதால் பெரும்பாலான மாதங்கள் ராஜமலை வனப்பாதை அடைக்கப்பட்டிருந்ததால், கடந்த ஆண்டு ராஜமலையில் 145 குட்டிகள் பிரசவிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு வரையாடுகளின் பிரசவ காலம் தொடங்கியுள்ளதால் வனத்தில் அமைதியான சூழல்களை ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வழக்கமாக மார்ச் மாதத்தில் பிரசவ காலம் தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு தற்போது 15-க்கும் மேற்பட்ட வரையாட்டுக்குட்டிகள் மற்றும் நிறைமாத கர்ப்பமான வரையாடுகள் இருப்பதால் மூணாறு எரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உட்பட்ட ராஜமலை சுற்றுலாதல வனசாலை அடைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்ல 2 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் வனசாலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Tags : Munaru Rajamalai Forest ,Reserve ,Forest Department , Drawing, Breeding, Munaru, Rajamalai Forest Reserve, Peace, Environment, Forest Department
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...