×

காரை மோதி 4 விவசாயிகள் படுகொலை ஒன்றிய அமைச்சர் மகனுக்கு ஜாமீன் : அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காரை மோதி விவசாயிகளை கொன்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரியில் கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அப்பகுதியில் நடந்த விழாவில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பங்கேற்க இருந்தார். எனவே, அவரை வழிமறித்து போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். அப்போது, அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா வந்த கார், விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில், 4 விவசாயிகள் பலியாகினர். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை, அலாகபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சிங் காணொலி மூலம் நேற்று விசாரித்தார். அப்போது, ஆசிஷ் மிஸ்ரா சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘ஆசிஷ் மிஸ்ரா ஒரு அப்பாவி. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை,’ என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல், ‘விவசாயிகள் மீது மோதிய காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்தார்’ என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில், ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

அரசாங்கம் யாரை காப்பாற்றியது?: பிரியங்கா கேள்வி
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் நேற்று பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘தனது மகன் 6 விவசாயிகளை கொன்ற பிறகும், அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்தாரா? பிரதமர் நல்லவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பிறகு ஏன் அவர் தனது அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை? அவருக்கு நாட்டின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா? இன்று அந்த மனிதனுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது, இனி அவர் வெளிப்படையாகவே சுற்றி வருவார். அரசாங்கம் யாரை காப்பாற்றியது? விவசாயிகளை காப்பாற்றியதா? விவசாயிகள் கொல்லப்பட்டபோது காவல்துறையும் நிர்வாகமும் எங்கே இருந்தன?. உங்களுடன் ஆடும் விளையாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்,’ என்றார்.

Tags : Allahabad High Court ,Union , 4 farmers killed in car crash Union Minister Bail for son : Allahabad High Court order
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...