×

இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவு செய்தவர் கைது: மறைமலைநகர் போலீசார் நடவடிக்கை

சென்னை: இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி வீடியோ பதிவு செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சின்ன விஞ்சியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (51). இவர், கடந்த 1ம் தேதி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் யாதவர் சமுதாயத்தை சார்ந்தவன். வாட்ஸ் அப்பில் பாலா என்பவர் தனது சமுதாயத்தையும், சமுதாய பெண்கள் பற்றியும் தரக்குறைவாகவும், இரு சமுதாயத்தினரிடையே மோதல் உருவாக்கும் விதமாக பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

இது இரு சமுதாயத்தினரிடையே மோதல் உருவாக்கும் விதமாக உள்ளது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்படி மறைமலை நகர் போலீசார், அவதூறாக வீடியோ பதிவு செய்த பாலா (எ) பாலசந்திரன் (எ) வீரபாலசந்திர அழகுமுத்து தேவர் என்பவர் மீது ஐபிசி 294(பி), 153(ஏ), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 8ம் தேதி கூடுவாஞ்சேரி காயரம்பேடு திருகுமரன் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (48) என்பவர் மறைமறைநகர் காவல் நிலையத்தில் பாலா மீது புகார் அளித்தார். அதில், பாலா என்பவர் போலீசாரின் மதிப்பை கெடுக்கும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் வாட்ஸ் மூலம் தரக்குறைவாக பேசி வருகிறார்.

இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பொது ஜனஅமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பதிவு செய்து வருகிறார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி மறைமலைநகர் போலீசார் பாலா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வீடியோ பதிவு செய்தவரின் செல்போன் சிக்னல் உதவியுடன் சென்னை வடபழனி பிரபல ஓட்டல் அருகே பாலாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து அவதூறாக வீடியோ பதிவு செய்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Maraimalai Nagar , Maraimalai Nagar police arrest man for posting defamatory video on social networking sites
× RELATED மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்