×

தள்ளுவண்டியில் தரமற்ற உணவு விற்பனை கோயம்பேட்டில் மலிவு விலை உணவகம் அமைக்க கோரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் குறைந்த விலைக்கு தரமற்ற உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே இங்கு மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியில் மார்க்கெட், பேருந்து நிலையம் அமைந்திருப்பதால், அங்கு 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அங்குள்ள நடைபாதை மற்றும் சாலையோரங்களில் ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். வெளியூர் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இவர்கள் குறைந்த விலையில் சாப்பிட, தள்ளுவண்டி கடைகளையே நாடுகின்றனர். ஆனால் அந்த கடைகளில் தரமற்ற உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இத்தகைய தரமற்ற உணவுகளை சாப்பிட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள், அங்குள்ள தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுபொருட்களை சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இங்கு தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுபொருட்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும். இங்கு தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயம்பேடு பகுதியில் கூடுதலாக மலிவு விலை உணவகங்களை ஏற்படுத்த சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags : Trolley ,Coimbatore , Trolley selling substandard food Request to set up affordable restaurant in Coimbatore
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்