×

கோடை சீசனுக்காக ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து செய்யும் பணி துவக்கம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் செடிகள் கவாத்து செய்யும் பணிகள் நேற்று துவங்கப்பட்டன. ஊட்டியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா நூற்றாண்டு விழாவின் போது, அதன் நினைவாக விஜயநகரம் பகுதியில் கடந்த 1995ம் ஆண்டு நூற்றாண்டு ரோஜா பூங்கா துவக்கப்பட்டது. இந்த ரோஜா பூங்காவில் 4,701 வீரிய ரக 31,500 ரோஜா செடிகள் உள்ளன. 2006ம் ஆண்டில் உலக ரோஜா பூங்கா சம்மேளனம் இந்த ரோஜா பூங்காவிற்கு சிறந்த ரோஜா என்ற விருதினை வழங்கி சிறப்பித்தது. தற்போது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா உள்ளது. இந்த ரோஜா பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது.

இக்கண்காட்சியின் போது, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த ரோஜா பூங்கா மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு மலர் அலங்காரங்களை மேற்கொள்வது வழக்கம். அதேபோல், ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் பல லட்சம் மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கோடை சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நேற்று பூங்காவில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணி துவக்கப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி துவக்கி வைத்தார். பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் உள்ள செடிகள் கவாத்து செய்யும் பணி ஓரிரு நாட்களில் முடிந்தவுடன் பராமரிப்பு பணிகள் துவக்கப்படும். இதனால், ஏப்ரல் மாதம் வரை பூங்காவில் மலர்களை காண முடியாது.

Tags : Ooty Rose Garden , Summer, for the season, Ooty rose, parade, work
× RELATED ஊட்டி ரோஜா பூங்காவில் கூட்டம் அதிகரிப்பு