×

கோயில்களின் குளங்களை தூர்வாரும் பணிக்கு ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களில் நிதியுதவி பெற நடவடிக்கை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 1586 கோயில்களுக்கு சொந்தமாக 2359 குளங்கள் உள்ளன. இந்த குளங்களால் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், அந்த குளங்கள் புண்ணிய தீர்த்தங்களாக பக்தர்களால் கருதப்பட்டு, அவற்றில் நீராடினால் தங்களது பாவம் நீங்கும் என நம்பப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில் குளங்களை முறையாக பராமரிக்க அவசியமானதாக கருதப்படுகிறது. எனவே, இந்த குளங்களில் நீர் வரும் மற்றும் வெளியேறும் கால்வாய்களை தூர்வாரி முறையாக பராமரித்தும், குளங்களை ஆழப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. எனவே, இப்பணிகளை ஓய்வு பெற்ற 4 மூத்த பொறியாளர்களை கொண்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான பணிகள் குறித்த நிபந்தனைகளை வரையறுத்து ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயில் குளங்கள் ஆலோசகர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவில் உள்ள கோயில்களின் குளங்களை ஆய்வு செய்து அவற்றின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அலுவலர்கள் ஆணையர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் கோயில்களின் குளங்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் தங்கள் பிரிவிலுள்ள குளங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவை முறையாக பராமரிக்கப்படுகின்றவா என்பது குறிந்து சம்மந்தப்பட்ட அலுவவர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
குளங்களின் உள்ளும் புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றினை அகற்றிட உரிய அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குளங்களுக்கு மழை நீர் வருவதற்கும், உபரி நீர் வெளியேறுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட கால்வாய்களை கண்டறிந்து அவற்றை சீரமைத்து தடையின்றி மழை நீர் வருவதற்கும், உபரி நீர் வெளியேறுவதற்கும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். குளங்களில் தூர் எடுத்து அவற்றை ஆழப்படுத்துவதற்கான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். குளங்களை சுற்றியுள்ள சுவர்களை பராமரித்திடவும், சுற்றுச்சுவர் இல்லாத குளங்களைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்திடவும் உரிய பரிந்துரைகள் அளிக்க வேண்டும். குளங்களில் உள்ள படிகளை சீரமைத்திட உரிய பரிந்துரைகள் அளிக்க வேண்டும்.

குளங்கள் பராமரிப்பது தொடர்பாக ஒன்றிய, மாநில மற்றும் பிற அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் நிதியுதவி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குளங்கள் பராமரிப்பு தொடர்பான பொறியாளர்களால் தயாரிக்கப்படும் மதிப்பீடுகளை பரிசீலனை செய்து பரிந்துரைத்தல், உரிய அலுவலருக்கு பரிந்துரைக்க வேண்டும். குளங்கள் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது வரையறை செய்யப்படும். குளங்கள் ஆலோசகர்கள் ஓராண்டிற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்னதோ அதுவரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். நிர்வாக நலன் கருதி மேற்கண்ட குளங்கள் ஆலோசகர்களை முன் அறிவிப்பின்றி ஆணையர் பணிநீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Union ,State Governments ,of ,Kumarakuruparan , Temple, ponds, dredging work, funding, charity
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...