×

கொடைக்கானல் அட்டுவம்பட்டி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த கும்பல்: தலைமைக் காவலர் அளித்த புகாரில் மூவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த கும்பலுக்கும், அப்பகுதி மக்களும் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பிரிவு அருகே அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்ற நபர்களிடம் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களுக்கும், மது விற்பனை செய்த நபர்களுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அரசு அனுமதியின்றி மதுபாட்டிலை விற்பனை செய்து வரும் நபர்களை கைது செய்ய வேண்டும் என அட்டுவம்பட்டி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பிறகு அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் ராமலிங்கம் என்பவர் அட்டுவம்பட்டி பிரிவு அருகே அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்களை விற்ற நபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் மது பாட்டில் விற்பனை செய்த நபர்கள் தலைமைக் காவலரை அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் உள்ளனர்.

இதனையடுத்து தலைமைக் காவலர் ராமலிங்கம், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் தேனியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், கொடைக்கானலை சேர்ந்த சரவணக்குமார், கொடைக்கானல் வில்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற 3 நபர்கள் மீது 294b, 353 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்ததுடன் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்ற நபர்கள் தலைமைக் காவலரை மிரட்டிய சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                       


Tags : Attuvampatti, Kodaikanal ,Chief Constable , Kodaikanal, Attuvampatti, illegal, liquor bottle, sale, gang, arrest
× RELATED பெண் ஆய்வாளரை தவறாக பேசிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!!