×

126வது பிறந்தநாளை முன்னிட்டு காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: காயிதே மில்லத்தின் 126வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். மதநல்லிணக்கம் காப்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் 126வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  மலர் போர்வை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், செஞ்சி கே.மஸ்தான், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, ஆவடி நாசர், மகேஷ் பொய்யா மொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், மயிலை த.வேலு, காரப்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பகுதி செயலாளர் மதன்மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர், நவாஸ் கனி எம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வரிசையில் போற்றி வணங்கத்தக்க தலைவர்களில் ஒருவர்தான் நம்முடைய காயிதே மில்லத். காயிதே மில்லத் இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ்மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அவையில் நடந்த விவாதத்தின் போது, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வரச் சிலர் முயன்றார்கள். அப்போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் காயிதே மில்லத். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது என்று சொன்னவர் மட்டுமல்ல, தமிழைத் தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் வீரர் தான் நம்முடைய கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத். 1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் நாள் காயிதே மில்லத் மறைந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்தபோது முதலமைச்சர் கலைஞர் கோவையில் இருந்தார். செய்தி கேள்விப்பட்டதும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டுச் சென்னை வந்த முதல்வர் கலைஞர், ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றார். கண்மூடிப் படுத்திருக்கிறார் காயிதே மில்லத். அப்போது முதல்வர் கலைஞர், ‘’அய்யா! நான் கருணாநிதி வந்திருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். லேசாகக் கண் திறந்து பார்க்கிறார் காயிதேமில்லத். முதல்வர் கலைஞரைப் பார்த்தார். கை நீட்டி கலைஞரின் கையைப் பிடிக்கிறார். ‘’முஸ்லீம் சமுதாயத்துக்கு தாங்கள் செய்த உதவிக்கெல்லாம் எனது நன்றி” என்று காயிதேமில்லத் சொன்னார். அத்தகைய நெருக்கமான நட்பு காயிதே மில்லத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் உண்டு. காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி, இடம் ஒதுக்கியவர் கலைஞர். காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர். அத்தகைய பெருமகனார் காயிதேமில்லத் நினைவை எந்நாளும் போற்றுவோம். அவர் உருவாக்கிய மதநல்லிணக்கம் காப்போம். அவரைப் போலத் தமிழ்ப் பற்றாளர்களாக – தமிழ்நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post 126வது பிறந்தநாளை முன்னிட்டு காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kaiit Millaat Memorial, BC ,Stalin ,Chennai ,Kaithe Millam ,BC ,G.K. Stalin ,Kayit Millaat Memorial ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட...