×

சிவசங்கர் பாபாவுக்கு சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி கோரி மனு: சிபிசிஐடி, சிறை துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர்பாபா கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிவசங்கர்பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.

அவரது தற்போதைய உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அவருக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிபிசிஐடி போலீசாரிடமும், புழல் சிறை நிர்வாகத்திடமும் ஜனவரி 23ம் தேதி மனு அளித்தும் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே, தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு காவல்துறைக்கும், புழல் சிறை நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து காவல்துறையும், சிறைத்துறையும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Sivashankar Baba ,Prisons Department , Sivashankar Baba seeks admission to private hospital at his own expense: CPCIT, Prisons Department
× RELATED லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எய்ட்ஸ்