×

வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கோவிட் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியவராக இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. நேற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. விரைவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்த சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து  மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்களிக்கும் நாளில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும், முகவர்களும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

கோவிட்19 முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சரியான சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும். அப்படி பின்பற்றாதவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
முகக்கவசம் மற்றும் மூகமுடி போதுமான அளவு இருப்பு வைத்திருத்தல் வேண்டும்.

அதனை அணியாமல் வருபவர்களுக்கு இந்த இருப்பு உதவும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உள்ளே, வெளியே வரும் இடங்களில் சானிடைசர், சோப் மற்றும் தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சுகாதார துறை அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

கோவிட்-19 அறிகுறிகளுடன் 98.4 பாரான்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் வழக்கமான வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் சரியான நேரத்தில் வாக்குச்சாவடியை அடைந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கோவிட் 19 இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியவராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : State Election Commission , All polling agents must have been vaccinated in 2 installments: State Election Commission Notice
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு