×

மேகதாது அணை கட்ட தமிழகம் சம்மதித்தால் மட்டுமே அனுமதி: ஒன்றிய அரசு அதிரடி பதில்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கர்நாடக மாநில எம்பி பிரஜ்வல் ரேவண்ணா எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில், ‘‘மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளதா? இந்த திட்டத்தினால் எவ்வளவு வன பகுதிகள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கும். எவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க எவ்வளவு காலம் ஆகும்? அனுமதி விரைந்து கிடைக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த  ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, ‘‘ஒன்றிய அரசுக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்டினால் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதில் 2,925.5 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிரி சரணாலயமும், 1,869.50 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஆகும். அதேப்போன்று சங்கமா, கொங்கிட்டோடி, மடவாளா, முத்ததி, பொம்மசந்தரா உள்ளிட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும்.

மேலும் சுற்றுசூழலுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் இரு மாநிலங்களான அதாவது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை சுமுகமான முடிவுக்கு வந்தால் மட்டுமே வழங்க முடியும் என நிபுணர் மதிப்பீட்டு குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் மேகதாது அணையின் உத்தேச திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரே குறிப்பு விதிமுறைகளுக்கான முன்மொழிவை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Megha Dadu Dam ,Tamil Nadu , Permission to build Megha Dadu Dam only if Tamil Nadu agrees: Union Government Action Answer
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து