×

சுயேச்சை எம்எல்ஏக்கள் சந்திப்புக்குப்பின் பேட்டி அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: புதுவை சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்று புதுவை சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். புதுவை அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன், அசோக் ஆகியோர் தங்கள் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. வாரிய தலைவர் பதவி, தொகுதி பிரச்னைகள் தீர்க்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நேற்று காலை மூன்று எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து பேசினர். முன்னதாக அவர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் துணைநிலை ஆளுனரை சந்திக்க முடிவு செய்திருக்கிறோம் என்றனர். அவர்களை சபாநாயகர் செல்வம் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.  

சுயேச்சை எம்எல்ஏக்கள் புகார் குறித்து சபாநாயகர் செல்வத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. எனது தொகுதியில் கூட பல பணிகள் நடக்கவில்லை. இதற்கு காரணம் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததுதான். இதனால் சமீபத்தில் ஒரு அதிகாரி மாற்றப்பட்டார். முதல்வரிடம் பேசி உடனடியாக இது சரி  செய்யப்படும். 50 சதவீத அரசு  ஊழியர்கள் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை. அவர்கள் மீது ஒன்றிய அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். எம்எல்ஏக்களின் பல்வேறு  பிரச்னைகளுக்கு அதிகாரிகளின் செயல்பாடுகளும் ஒரே காரணமாக இருக்கிறது.

ஒன்றிய அரசு சார்பில் சமீபத்தில் ஜலசக்தி திட்டத்தின் கீழ் ரூ. 33 கோடி நிதி தரப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 1.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்கு பின் ரூ. 90 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி தரப்படும். வாரிய  தலைவர் பதவியை பொறுத்தவரை அனைத்து வாரியங்களும் நஷ்டத்தில் இயங்குகிறது. குறிப்பிட்ட 5 வாரியங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகிறது. அந்த வாரியங்களுக்கு தலைவர் பதவிகளை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.  இது கூட்டணி கட்சியினர் அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய  விஷயம் என்றார்.

Tags : Pakir , Officials do not co-operate with government in interview after meeting of independent MLAs: New Speaker Pakir accuses
× RELATED இந்தியாவில் இருந்தே நியூசி.க்கு மிரட்டல்: பாக். அமைச்சர் பகீர் புகார்