×

சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடக்கும் நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி? விரைவில் அரசாணை வெளியிடுவதாக தமிழக அரசு தகவல்

புதுடெல்லி: பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு, மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது 13,000 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன்பின் 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தபோது மேற்கண்ட 13,000 மக்கள் நலப் பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிறகு 1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டது. பின்னர் 2001ம் ஆண்டு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த போது, மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2011ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக, மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது.

அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கடந்த 2014ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் கொரோனா காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வந்தது. இதற்கிடையே தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், ‘பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது.

அதற்கான ஆலோசனைகளின் விவரங்கள் இன்னும் வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  இந்நிலையில் இன்று தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் குமணன் உச்சநீதிமன்றத்தில் அளித்த கடிதத்தில், ‘மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல் தொடர்பாக மாநில ஊரக உள்ளாட்சித் துறை முன்மொழிவை அளித்துள்ளது. அதனை பரிசீலித்து வருகிறது. மாநில அரசு உரிய முடிவுகளை எடுத்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். எனவே, இவ்வழக்கை மேலும் 4 வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். நாளை இவ்வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் மேற்கண்ட கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Suprem Cord ,Government of Tamil Nadu , Will public health workers be re-employed as the trial is set to begin tomorrow in the Supreme Court? The Tamil Nadu government has informed that the government will release it soon
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...