×

குடோனில் பதுக்கி இருந்த 480 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே குடோனில் பதுக்கி இருந்த 480 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு, பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை  தடுக்கும் வகையில் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குட்கா, புகையிலை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில் பூதப்பாண்டி அடுத்துள்ள பன்னியோடு பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் சப்ளை நடைபெறுவதாக தனிப்படை எஸ்.ஐ. மகேஸ்வர ராஜ் தலைமையிலான போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் நேற்று மாலையில் பன்னியோடு பகுதியில் எஸ்.ஐ. மகேஸ்வரராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் வேகமாக தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், பைக்கில் வைத்திருந்த சாக்கு மூடையை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு ெகாண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் பூதப்பாண்டி தோமையார்புரம் பகுதியை சேர்ந்த குமார் (32), வீரப்புலி பகுதியை சேர்ந்த ஜோஸ் (33) என்பதும், பூதப்பாண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்ய கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து சாக்கு மூடையில் இருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள், பைக்கை பறிமுதல் செய்த போலீசார், மேற்கொண்டு இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

இதில் பூதப்பாண்டி அருகே உள்ள சுருளோடு பகுதியில் தோட்டத்தில் குடோன் அமைத்து, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 15 சாக்கு மூடைகளில் தலா 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 480 கிலோ புகையிலை பொருட்கள், குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பெங்களூரில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : Gudon , Seizure of 480 kg of tobacco products stored in Gudon: 2 arrested
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்