×

ஆலங்காயம் அருகே அரிசியில் விஷம் கலந்து 5 மயில்களை கொன்ற விவசாயி கைது

ஆலங்காயம் : ஆலங்காயம் அருகே அரிசியில் விஷம் கலந்து 5 மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்(46). அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய விளை நிலத்தில் மக்காசோளம் பயிர் செய்துள்ளார்.

 இந்நிலையில், விளைநிலத்தில் அவ்வப்போது, மயில்கள் வந்து பயிர்களை மேய்ந்துவிட்டு செல்வதால் ஆத்திரமடைந்த, ரமேஷ் அரிசியில் விஷம் கலந்து நிலத்தில் தூவி உள்ளார். விஷம் கலந்த அரிசியை உட்கொண்ட 5 பெண் மயில்கள் விளைநிலையத்தின் அருகே ஆங்காங்கே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவல் அறிந்த ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இறந்த 5 பெண் மயில்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், விவசாயி ரமேஷ் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது  உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் விவசாயி ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில், ஆங்காங்கே வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது என்ற காரணத்திற்காக, கொல்லப்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த 28ம் தேதி இதேபோன்று குரிசிலாப்பட்டு பகுதியில், 7 மயில்களை விவசாயி ஒருவர் விஷம் வைத்து கொன்றுள்ளார்.

இதுபோன்ற செயல்களை தடுப்பதற்காக வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதங்களுக்கு, வனத்துறை இழப்பீடு வழங்கி வரும் நிலையிலும், இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது மிகவும் வருத்தத்திற்குரியது. வரக்கூடிய நாட்களில், விளைநிலங்களில் வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Tags : Alangayam , Alangayam,Rice Poison, Poison,Peacock
× RELATED ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை...