×

தமிழர்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: வேல்முருகன் பேட்டி

சென்னை: நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி  கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பிறகு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நிருபர்களிடம் கூறியதாவது: 2006, 2007ல் உயர்கல்வியில் நுழைவு தேர்வை ரத்து செய்வதற்கு தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர், அந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து, குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அன்று அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்று கொண்டது.

ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம், மருத்துவ கல்வி அமைச்சகம் ஏற்று கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே முறையை பின்பற்றிதான் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறிக்கின்ற இந்த நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வரால் இற்றப்பட்ட இந்த சட்ட மசோதாவை 142 நாட்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக மக்கள் திறள் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

முதல்வரின் அறிவுறுத்தலால் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுத்ததன்படி ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்டி மீண்டும் தமிழக ஆளுநருக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைத்து அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் எடுத்திருக்கிறார். இதை முழு மனதாக ஆதரித்திருக்கிறோம். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழர்களையும், தமிழ்நாட்டையும், மாணவர்களையும் வஞ்சித்து வருகிறது. இது ஜனநாயக மரபுகளுக்கு முரணானது.

ஆளுநர் மாளிகை முற்றுகை
நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி தமிழர்களை இழிவுபடுத்திய ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் இன்று மதியம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Union government ,Tamils ,Velmurugan , Union government cheats Tamils: Velmurugan interview
× RELATED தமிழையும், தமிழரையும் உண்மையாக...