×

கேட் கீப்பர்கள் நியமனம் செய்து டெமு ரயில் பயண நேரம் குறைப்பு : பயணிகள் மகிழ்ச்சி

பட்டுக்கோட்டை : 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் முறையாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மீட்டர் கேஜ் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

அன்று முதல் 110 ஆண்டுகள் ஓடிய ரயில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை 20 ரயில்வே நிலையங்கள், 73 ரயில்வே கேட்டுகளை உள்ளடக்கிய 149 கி.மீ தூரம் அகல ரயில் பாதை பணிக்காக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையிலும், அதே ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரையிலும் நிறுத்தப்பட்டது. சுமார் ரூ.1500 கோடி திட்ட மதிப்பீட்டில் சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் முடிவடைந்து 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை டெமு ரயில் மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு 7 மணி நேரம் இயக்கப்பட்டது.

இந்த டெமு ரயிலும் நிர்வாக காரணங்களைகாட்டி பலமுறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல் இதே டெமு ரயில் சிறப்பு விரைவு டெமு ரயிலாக இயக்கப்பட்டது.

 அப்போது காரைக்குடியிலிருந்து திருவாரூரின் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரம் 40 நிமிடமாக குறைக்கப்பட்டது. காரணம் ஏற்கனவே இருந்த 20 ரயில்வே நிலையங்களை 17 நிலையங்களாக குறைக்கப்பட்டதால் பயண நேரமும் குறைத்து இயக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை உள்ள 73 ரயில்வே கேட்டுகளுக்கு கேட் கீப்பர்கள் இல்லாத காரணத்தினாலேயே கடந்த சில ஆண்டுகளாக மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை 5 மணி நேரம் 40 நிமிடத்தில் இயக்கப்பட்டு வந்தது.

டெமு ரயில் இயக்கப்பட்ட ஆண்டிலிருந்து தொடர்ந்து ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஒன்றிய அரசை வலியுறுத்தி நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் போராட்டங்களுக்கு பணிந்த ஒன்றிய அரசு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை உள்ள 40 ரயில்வே கேட்டுகளுக்கும் ஏற்கனவே ரயில்வேயில் நிரந்தரமாக பணியாற்றிய கேட் கீப்பர்கள் மற்றும் தற்போது புதிதாக எடுக்கப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவத்தினரையும் சேர்த்து 40 ரயில்வே கேட்டுகளுக்கும் 40 கேட் கீப்பர்கள் பணி நியமனம் செய்தது.

ஏற்கனவே 5 மணி நேரம் 40 நிமிடம் பயண நேரமாக இருந்த திருவாரூர் - காரைக்குடி பயணம் கடந்த 26ம் தேதி முதல் கேட் கீப்பர்கள் நியமனம் செய்யப்பட்டதால் முதல் கட்டமாக பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூருக்கு 1 மணி நேரம் 45 நிமிடத்தில் ரயில் இயக்கப்பட்டது. மேலும் பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரை இன்னும் கேட் கீப்பர்கள் நியமனம் செய்யப்படாததால் வழக்கமான 3 மணி நேரத்திலேயே ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே உள்ள 33 ரயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஏற்கனவே இருந்த நிரந்தர பணியாளர்களை சேர்த்து 33 ரயில்வே கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்ட காரணத்தால் வரும் 7ம் தேதி முதல் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு இந்த ரயில் முன்பிருந்தது போலவே 3.30 மணி நேரத்திலேயே சென்றுவிடும். ரயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க நடவடிக்கை எடுத்த தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், காரைக்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கட்டணத்தில் மாற்றம் இல்லை

ரயில் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்ததுபோல திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு ரூ.75. திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரூ.40. பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு ரூ.40.

ரயில் வந்து செல்லும் நேரம்

முன்பதிவில்லா சிறப்பு டெமு ரயில் (வண்டி எண் 06541/06542) மயிலாடுதுறையிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 9.55 மணிக்கு வருகிறது. பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு நண்பகல் 11.45 மணிக்கு செல்கிறது.

மீண்டும் காரைக்குடியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு 5.23 மணிக்கு வருகிறது. பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருவாரூருக்கு செல்கிறது. திருவாரூரிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறைக்கு இரவு 9.15 மணிக்கு செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் பராமரிப்பு பணிகளுக்காக செல்வதால் இயங்காது. பல ஆண்டுகளுக்கு பிறகு கேட்கீப்பர்கள் நியமிக்கப்பட்டு இந்த ரயில் செல்லவிருக்கிறது. இந்த பயண நேரம் குறைக்கப்பட்டதால், ரயில் பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Tags : DeMu , Thiruvarur,Pattukkottai,Mayiladuthurai,karaikudi, DEMU Train
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...