×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.300, 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை 1 முதல் 10ம் வகுப்புவரை படித்தவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்பிசி, பிசி (முஸ்லிம்), ஓபிசி, ஓசி வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி (அருந்ததியர்) 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.

தகுதியுடைய பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணையதள முகவரியிலும் பதிவுசெய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட சான்று, கல்விச்சான்று நகல், சாதிச்சான்று நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் எதுவும் பாதிக்கப்படாது. மேலும் விவரங்களுக்கு 044 -27237124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kanhipuram District , Unemployed Youth Scholarship in Kanchipuram District: Applications are welcome
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில்...