×

தர்மபுரியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

தர்மபுரி: தர்மபுரி தடங்கம் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் 700 காளைகள் பங்கேற்றன. 800 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை, தர்மபுரி மாவட்ட தலைமை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், பொங்கல் பண்டிகை மற்றும் மண்டு மாரியம்மன் கோயில் விழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இப்போட்டி தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகேயுள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியை சார்ஆட்சியர் சித்ரா விஜயன் தொடங்கி வைத்தார். இதில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, தர்மபுரி மாவட்ட தலைமை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் தாபா சிவா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டி துவங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த போட்டியில், திருச்சி, மதுரை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றன. 800  மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

போட்டி துவங்கியதும், முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்தோடியது. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. இதையடுத்து, பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அண்டா, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலுதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்து போட்டியை கண்டு ரசித்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, எஸ்பி கலைசெல்வன் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் புஷ்பராஜ், அண்ணாமலை மற்றும் டிஎஸ்பி வினோத் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags : Jallikkatu Kolagalam , Jallikattu commotion in Dharmapuri
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...