×

ராஜாக்கமங்கலம் அருகே லாரி திருட்டு வழக்கில் மேலும் 3 பேர் கைது-இன்ஜின் நம்பரை மாற்ற பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல்

ஈத்தாமொழி :  திங்கள்நகர் அருகே தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு சொந்தமான லாரி கடந்த 2018ம் ஆண்டு, ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தெக்குறிச்சியில் வைத்து திருட்டு போனது. இது தொடர்பாக ரவீந்திரன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில், தனது உறவினரான ரவீந்திரபிரசாத் மற்றும் சிலர் தான் லாரியை திருடி சென்றதாக கூறி இருந்தார்.

போலீசார் ரவீந்திரபிரசாத் மற்றும் அவரது ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் லாரியை மீட்க முடிய வில்லை. இந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீனிலும் வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக லாரி குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம்  17ம் தேதி நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பெயின்டிங் ஒர்க் ஷாப்பில், சம்பந்தப்பட்ட லாரி நிற்பதாக தனிப்படை ேபாலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லாரியை மீட்டு கொண்டு வந்த போது அதில் இன்ஜின் நம்பர் உள்ளிட்டவை மாற்றப்பட்டு இருந்ததும், இந்த லாரி ஏற்கனவே திருடப்பட்ட ரவீந்திரனுக்கு சொந்தமானது என்பதும் உறுதியானது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒர்க்‌ஷாப்பில் இருந்தவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது, ராஜாக்கமங்கலம் பிள்ளையார்விளையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் என்பவர் தான் லாரியை கொண்டு வந்தார் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் அவரது டிரைவர் ராஜேந்திரனை பிடித்து விசாரித்ததில் ரவீந்திர பிரசாத் கூறியதன் பேரில் ரவீந்திரனின் லாரியை திருடி, ஸ்ரீகிருஷ்ணனிடம் கொடுத்ததும், ஏற்கனவே லாரிகள் வைத்து தொழில் செய்து வரும் அவர் தன்னிடம் இருந்த ஒரு பழைய லாரியின், ஆர்சி புத்தகத்தை வைத்து லாரியின் பதிவு எண், இன்ஜின் நம்பர் என அனைத்தையும் மாற்றி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் ஸ்ரீ கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் நம்பரை மாற்ற உதவியதாக டிங்கர் ஒர்க்‌ஷாப் நடத்தி வரும் வெள்ளமடம் சகாயநகரை சேர்ந்த ராஜகோபால் (40) மற்றும் வல்லன்குமாரன்விளையை சேர்ந்த மெக்கானிக் மணிகண்டன்(31), வட்டவிளையை சேர்ந்த கண்ணன் (59) ஆகியோரை கைது செய்தனர். இதில் ராஜகோபால் தான் நம்பரை மாற்றி உள்ளார். மணிகண்டனின் ஒர்க்‌ஷாப்பில் வைத்து தான் இதை மாற்றி உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

இந்த நம்பரை மாற்றுவதற்கான உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நாகர்கோவில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும்  இது போன்று பல வாகனங்கள் போலி நம்பர் பிளேட் மற்றும் இன்ஜின் நம்பர்களுடன் இயங்கி வருவதாக போலீசாரிடம் கைதானவர்கள் கூறி உள்ளனர். தனிப்படை போலீசாருக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜகோபாலே ஏராளமான கனரக வாகனங்களுக்கு இன்ஜின் நம்பர்களை மாற்றி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Rajakamangalam , Ithamozhi: Raveendran hails from Thalakkulam area near Thingalnagar. He kept the truck and did business. The lorry owned by him was last in 2018
× RELATED கலைஞர் பிறந்த நாள் விழா