×

தை அமாவாசையையொட்டி இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

* தடை நீங்கியதால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்கள் குவிந்தனர்
* திருச்செந்தூர் கடற்கரையிலும் ஏராளமானோர் திரண்டனர்

நெல்லை: இன்று தை அமாவாசையையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி நீர் நிலைகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2 ஆண்டுகளாக தர்ப்பணம் கொடுக்க விதித்த தடை அகற்றப்பட்டதால் பொதுமக்கள் இன்று குவிந்தனர். மறைந்த முன்னோர்களுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் அமாவாசை நாட்களில் எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அனைத்து தமிழ் மாத அமாவாசையிலும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தை, ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் வழிபடுவார்கள்.

நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்கு வந்து நம் ஆண் வாரிசுகம் நமக்காக தர்ப்பணம் செய்கிறார்களா? என ஏக்கத்துடன் காத்திருப்பதாக ஐதீகம் உள்ளது. இவ்வாறு தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆன்மா மகிழ்வதுடன், அவர்களது ஆசீர்வாதமும் சந்ததிதிகளுக்கு கிடைக்கிறது. தர்ப்பணம் செய்வதுடன் மறைந்த முன்னோர்கள் வயதுடைய ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் தான, தர்மம் செய்வதன் மூலம் நம் பாவங்கள், கர்ம வினைகள், தீ வினைகள் நீங்குவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று தை அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்படுவதால் அதிகாலை முதல் நெல்லை, ெதன்காசி, தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குவிந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக நீர் நிலைகளில் நேரடியாக வந்து தர்ப்பணம் கொடுக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஊரடங்கு நீக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், இன்று எந்தத் தடையும் இன்றி தர்ப்பணம் செய்வதற்காக நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் வந்தனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையான பாபநாசம், வி.கே.புரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை, அருகன்குளம், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம்,

செங்கோட்டை, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, தாமிரபரணி ஆறுகள், முத்தாலங்குறிச்சி, வைகுண்டம், கருங்குளம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் கடற்கரை, முக்காணி, பழையகாயல் சங்குமுகம் தீர்த்தம் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரைகளில் ஏராளமனோர் மூதாதையர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி யாசகம் பெறுவதற்காக ஏழை எளியோர் தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்திருந்தனர். தை அமாவாசையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருச்செந்தூர்
கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம், திதி கொடுக்க அரசு தடைவிதித்திருந்தது. இன்று தை மகாளய அமாவாசையில் கடற்கரையில் மக்கள் தர்ப்பணம் கொடுக்க அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்செந்தூர் கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் கடலில் புனிதநீராடினர். இதையொட்டி கடற்கரையில் ஏராளமான புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் முன்பு பொதுமக்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு பூஜை செய்து திதி கொடுத்தனர். பின்னர் பூஜை செய்த பொருட்களை கடலில் கரைத்தனர். முன்னதாக இன்று தை அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 6.30 உதயமார்த்தாண்ட தீபாராதனை மற்றும் கால பூஜைகள் நடைபெற்றது. தை அமாவாசையையொட்டி கடற்கரையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. கோயிலில் குறைந்தளவே பக்தர்கள் காணப்பட்டனர்.

Tags : Paddy ,Tengasi ,Thoothukudi , Today is Nellai, Tenkasi and Thoothukudi for the ancestors of the Thai New Moon
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...