டிப்ளமோ, பட்டப்படிப்புகள் ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு வகுப்புகள் நடத்த அனுமதியில்லை: ஏஐசிடிஇ தலைவர் தகவல்

புதுடெல்லி: ‘தனியார் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி முடியாது,’  என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகள் ஆகியவை ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தொலைநிலை கல்வி திட்டம், ஆன்லைன் மூலம்  டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் வந்தன. விதிகளின்படி,  ஆன்லைன் நிறுவனங்்கள் அதுபோன்று முகவர்களாக செயல்படுவதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று யுஜிசி தெரிவித்திருந்தது.    

இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்கரபுத்தே நேற்று கூறியதாவது: நாங்கள் ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத துறையில் நுழையக் கூடாது. விதிமுறைகள் எல்லோருக்கும் ஒரே வகையில்தான் இருக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகளுக்கு டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகளை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளை அவர்கள் தங்களே சொந்தமாக நடத்த வேண்டும். இந்த  வேலையை  தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து மூன்றாவது நபர்களின் மீது சவாரி செய்யக் கூடாது.  இந்த நிறுவனங்கள் எம்பிஏ, எம்சிஏ வகுப்புகளை நடத்துவதாக விளம்பரங்கள் கொடுத்துள்ளன. எம்பிஏ, எம்சிஏ போன்ற பட்ட மேற்படிப்பு வகுப்புகளை பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகள்தான்  நடத்த வேண்டும்.  

பல்கலை கழகங்களை பொறுத்தவரையில், வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வு வரை ஆன்லைன் கல்வி நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கு மேல் அவர்களுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் கல்வி நிறுவனங்களில் சேரும் முன், அந்த நிறுவனங்களை பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்த கொண்டு பின்னர் கட்டணங்களை செலுத்துமாறு மாணவர்கள், பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: