×

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னையில் அமைகிறது 6வது புதிய நீர்த்தேக்கம்

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை நம்பிதான் உள்ளது. இதை தவிர்த்து தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீரும் பெறப்பட்டு வருகிறது. இந்த நீரை கொண்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. குறிப்பாக, சராசரியாக மாதத்துக்கு 1 டிஎம்சிக்கு மேல் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக புதிதாக நீர்த்தேக்கம் அமைக்க வேண்டியுள்ளது.

இதற்காக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து 6வது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் நபார்டு வங்கி மூலம் ரூ.55.7 கோடி நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.6.5 கோடி மாநில அரசு நிதி விடுவித்துள்ளது. அதன்படி ரூ.62.2 கோடி மதிப்பில் இப்பணிகள் நடந்து வருகிறது.இதில், ரூ.38 கோடி நீர்த்தேக்க கட்டுமான பணிக்கும், ரூ.11.7 கோடி கடல்நீர் உட்புகுதலை தடுக்க சுவரும், 15 இடங்களில் ரூ.41 லட்சம் செலவில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.3.6 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வரை 60 சதவீத பணிகள் வரை முடிந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இப்பணிகளை வேகப்படுத்த பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இப்பணிகளை வரும் ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 58 மில்லியன் கன அடியாக உள்ள ஏரிகளின் நீர் இருப்பு 350 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் என்பதால், ஆரணியாற்றில் இருந்து திறக்கப்படும் 1.76 டி.எம்.சி. உபரிநீர் கடலுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. மேலும், இப்பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க முடியும். இதன் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்னை தீரும் .

Tags : Chennai , The 6th new reservoir is being set up in Chennai to meet the demand for drinking water
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...