×

ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 5 மாதங்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றம்: போலீஸ் பாதுகாப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சென்னை - திருப்பதி சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி ஊத்துக்கோட்டை தாசில்தார் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர். இதனையடுத்து, 2வது முறையாக மீண்டும் ஆகஸ்ட் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், `நாங்கள் இப்பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்’ என்றனர்.

இதை கேட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்றிதான் ஆகவேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதையறிந்த முனியம்மாள் என்ற பெண் உடலின் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை காப்பாற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். அப்போது, `15 நாட்கள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் காலி செய்து விடுகிறோம்’ என ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலாவின் மகன் பிரபு கூறினார். மேலும், கிராம மக்களும் ஊர் பெரியவர்களும், `15 நாட்களுக்குள் காலி செய்து விடுகிறோம்’ என எழுதி கொடுத்தனர்.  

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி தலைமையில் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர்கள் சுந்தர், திருமலை, மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் ஞானசவுந்தரி முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தாரணீஸ்வரி, குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி   உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆவடி முதல் பட்டாபிராம் வரை சிடிஎச் சாலையோரத்தை பழம், மீன், காய்கறி கடைகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்திருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பாதசாரிகளும் சாலை ஓரம் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சாலை ஓர ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பினர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஆவடி கோட்ட நெடுஞ்சாலைத்துறையினரும் ஆவடி போக்குவரத்து போலீசாரும் இணைந்து சாலை ஓர ஆக்கிரமிப்பை அகற்றினர். குறிப்பாக ஆவடி செக்போஸ்ட் முதல் பட்டாபிராம் வரை சிடிஎச் சாலை ஓரத்தில் இருந்த காய்கறி, பழ, மீன்கடைகள் உட்பட 50 கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டன. மேலும் இந்த சாலை ஓர ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Athupakkam , Removal of occupation after 5 months in Athupakkam village: Police protection
× RELATED எல்லாபுரம், பூண்டி ஒன்றிய திமுக...