×

காரணை கிராமத்தில் பூம்புகார் சார்பில் ரூ.5.61 கோடியில் கைவினை சுற்றுலா கிராமம்

மாமல்லபுரம்: பூம்புகார் சார்பில், கைவினை சுற்றுலா கிராமம் அமைக்க  ரூ.5.61 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், முதற்கட்டமாக  ரூ.1.8 கோடியில் நடக்கும் பணிகளை கலெக்டர்  ராகுல்நாத் ஆய்வு செய்தார். பூம்புகார் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழக கைவினைக் கலைஞர்களின் திறமை மற்றும் உழைப்பால் தயாரிக்கப்படும் பித்தளை, பஞ்சலோகம், மரம், கற்களாலான கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக செயல்படுகிறது. மாமல்லபுரத்துக்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், கைவினைக் கலைஞர்களையும் இணைக்கும் வகையில் ரூ.5.61 கோடியில் கைவினை சுற்றுலா கிராமம் எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதில், முதல்கட்டமாக ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாமல்லபுரம் பேரூராட்சி ஐந்துரதம் பகுதியில் 30 கடைகளை அழகு படுத்துதல், காரணை கிராமத்தில் வசிக்கும் 28 கைவினை கலைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், மழைநீர் கால்வாய், தெருவிளக்கு, அலங்கார வளைவு, மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயில் அருகே ஸ்தூபி உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. அதில், ஒரு சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் பூம்புகார் சார்பில் நடந்து வரும் சிற்ப கலைஞர்களின் வீடுகள் அழகு படுத்துதல், அலங்கார வளைவு, மழைநீர் கால்வாய் ஆகிய பணிகளை கலெக்டர் ராகுல்நாத் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, அதேப் பகுதியில் ரூ.21 லட்சத்தில் சாலையின் இருபுறமும் நடக்கும் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, மழைநீர் கால்வாயில் குடிநீர் பைப்லைன் இருப்பதை கண்டார் உடனே, சம்பந்தப்பட்ட இன்ஜினியரை அழைத்து, மழைநீர் கால்வாயில் யாராவது குடிநீர் இணைப்பு கொண்டு செல்வார்களா, குடிநீர் பைப்லைன் உடைந்து விட்டால், கான்கிரீட்டை உடைத்து உள்ளே சென்று சரி செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும், 2 நாட்களுக்குள் மழைநீர் கால்வாயில் செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்து, ஒதுக்குப் புறமாக கொண்டு செல்ல வேண்டும். குடிநீர் பைப்லைன் அகற்றும் பணி முடிந்த பிறகு அதனை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என எச்சரித்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் குழாய் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, மதிமுக பிரமுகர் காரணை கோதண்டன் உள்பட பலர் இருந்தனர்.


Tags : Poompuhar ,Karanai village , 5.61 crore handicraft tourism village on behalf of Poompuhar in Karanai village
× RELATED பூம்புகாரில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை