×

நடிகர் திலீப் 31ம் தேதி காலைக்குள் 6 செல்போன்களை ஒப்படைக்கவேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: நடிகர் திலீப், அவரது தம்பி அனூப் மற்றும் தங்கையின் கணவர் சூரஜ் ஆகியோர் பயன்படுத்திய 6 செல்போன்களை 31ம் தேதி காலை 10.15 மணிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை பலாத்கார வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் திலீப், அவரது தம்பி உள்பட 5 பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணையின்போது, திலீப் உள்பட 5 பேரிடமும் 3 நாள் விசாரணை நடத்தி, அறிக்கையை ஜனவரி 27ம் தேதி தாக்கல் செய்யவும், அதுவரை திலீப்பை கைது செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே நடிகர் திலீப், அவரது தம்பி அனூப் மற்றும் தங்கை கணவர் சூரஜ் ஆகியோர் நடிகை பலாத்கார சம்பவம் நடந்தபோது பயன்படுத்திய செல்போன்களை மறைத்து வைத்துள்ளனர். அதை ஒப்படைக்க மறுப்பதால் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி, நேற்று முன்தினம் போலீஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை தொடங்கியபோது திலீப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திலீப் பயன்படுத்திய 3 செல்போன்களும் தடயவியல் பரிசோதனைகளுக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கிருந்து வந்த பிறகு போன்களை ஒப்படைப்பதாக கூறினார். போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘திலீப் 4 செல்போன்களை பயன்படுத்தினார். எனவே அவரது 4 செல்போன்கள், அவரது தம்பி பயன்படுத்திய 2 போன்கள், தங்கையின் கணவர் பயன்படுத்திய ஒரு போன் என, 7 போன்களை ஒப்படைக்க வேண்டும். போன்களை ஒப்படைக்காவிட்டால், திலீப்பின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினார். ஆனால், திலீப் 3 போன்களை மட்டுமே பயன்படுத்தியதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத், ‘வரும் 31ம் தேதி காலை 10.15 மணிக்குள் திலீப்பின் மூன்று போன்கள் உள்பட 6 போன்களையும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால், போன்கள் மும்பையில் இருப்பதால் அங்கிருந்து வருவதற்கு தாமதமாகும். எனவே, செவ்வாய்க்கிழமை போனை ஒப்படைப்பதாக திலீப் வழக்கறிஞர் கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி கோபிநாத், ‘31ம் தேதி காலையில் கண்டிப்பாக 6 போன்களையும் ஒப்படைக்க  வேண்டும். உங்களுக்கு வேண்டும்என்றால் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகலாம்’ என்று தடாலடியாக கூறினார். கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு திலீப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Dileep ,Kerala High Court , Actor Dileep to hand over 6 cell phones by 31st morning: Kerala High Court orders action
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...