சென்னை: சென்னை பார்க் டவுன் குழந்தை தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் சந்தேகத்தின்பேரில் பெண்கள், ஆண்கள் இருப்பதாக பூக்கடை காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் தளவாய் சாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த4 சிறுமிகளை பிடித்தனர். மேலும் ஒரு பெண்ணையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள், சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆய்வாளர் விசாரணை நடத்தியதில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சாலிமா காத்தூன் (41) மற்றும் அன்வீர் உசேன் (38), காஞ்சிபுரம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த அலாம்கீர் உசேன் (22) ஆகியோர் என தெரிந்தது.
இவர்கள் திரிபுராவில் இருந்து கடந்த டிசம்பர் 15ம் தேதி 17 வயது சிறுமியை கொல்கத்தா மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி கேளம்பாக்கம் படூர் அழைத்து வந்து அலாவுதீன், மொய்தீன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும், திரிபுரா மாநிலத்தில் இருந்து 13, 14, 15 வயதுடைய மூன்று சிறுமிகளை பியூட்டி பார்லரில் வேலை என்று ஒவ்வொரு வீட்டிற்கும் 13,000 ரூபாய் கொடுத்துவிட்டு கடந்த 14ம் தேதி சென்னைக்கு அழைத்து வந்தனர். இங்கிருந்து கேளம்பாக்கம் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். உதவி ஆய்வாளர் தலைமையில் வந்த போலீசார் இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமலும் கைது செய்யாமலும் விட்டுவிட்டு சென்றனர் என்பது தெரியவந்தது. சிறுமிகளை அங்கிருந்து வீடு காலி செய்து பெங்களூரு அழைத்துச் செல்வதற்காக கடந்த 27ம் தேதி பார்க் டவுனில் குழந்தை தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் தங்க வைத்தது தெரிந்தது. சிறுமிகளுக்கு பெங்களூரு செல்ல விருப்பம் இல்லாததால் அங்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பிடித்தனர். சிறுமிகளை கெல்லீசில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட சாலிமா காத்தூனை கேளம்பாக்கம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 2 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.