×

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவி இயங்காவிட்டால் கியூஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்கலாம்

சென்னை: ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்காவிட்டால் கியூஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் கியூஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டை எண்ணை  விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேஷன் பொருட்களை வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: இணைய இணைப்பு, தொலை தொடர்பு இணைப்பு தடைபடுதல், விற்பனை முனைய தற்காலிக செயலிழப்பு போன்ற காரணங்களால் ரேஷன் கடைகளில் சில நேரங்களில், விரல் ரேகை சரிபார்க்கும் முறை தற்காலிகமாக செயல்படுத்தப்பட இயலாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் இதர வழிமுறைகளின்படி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் மென்பொருள் வசதிகள் ஏற்கனவே செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழிமுறைகளின்படி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மறுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

 எனவே, குடும்ப அட்டைதாரர்கள் எத்தகைய சூழலிலும் ரேஷன் பொருட்களை பெறும் வகையில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டால் சேவை மையத்துக்கு தகவல் வழங்கி டிக்கெட் எண் பெற்று அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்கு இடைபட்ட காலத்தில் இதர வழிமுறைகளின் படி தடையின்றி பொது விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூஆர்-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து, அதன் அடிப்படையிலும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். தடங்கல்கள் சரி செய்யப்பட்ட உடன் மீண்டும் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் பொது விநியோகம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : If the fingerprint registration device does not work in the ration shops, the QR can scan and deliver the goods
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...