×

முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார்

சென்னை, ஜூன் 7: முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக ₹525 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டோர் ேநற்று தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் நிதியை நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் தேர்தல் செலவுக்கு மடைமாற்றி மோசடி செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு முதல் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட் நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ₹1 லட்சம் முதல் ₹5 கோடி என ₹525 கோடி வரை நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளனர். தற்போது ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் யாதவ் உள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் கட்சியை நடத்தி வரும் தேவநாதன் யாதவ், தற்ேபாது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்தவித நிதியும் அளிக்காமல், பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நேற்று காலை மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தின் முன்பு திரண்டனர். தங்களது முதலீட்டு பணத்தை முழுமையாக தர வேண்டும் என்றும், இதற்கு தேவநாதன் யாதவ் உரிய பதிலை தர வேண்டும் என்றும் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தனர். ஆனால் எங்கள் முதலீடு பணத்தை தேர்தல் செலவுக்கு எடுத்துச் சென்று தேவநாதன் செலவு ெசய்துவிட்டதாகவும், எனவே எங்கள் முதலீட்டு பணத்தை உடனே தர வேண்டும் என்றும் கூறி பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிமாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவநாதனை கைது செய்து விசாரிக்க வேண்டும்
பம்மல் பகுதியை சேர்ந்த ராமநாதன் (62) கூறுகையில், 152 ஆண்டுகள் பழமையான நிதி நிறுவனம் என்பதால்தான் நான் ₹20 லட்சம் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்தேன். இதில் வரும் மாத வட்டியில்தான் வாழ்ந்து வருகிறேன். அவசியம் வரும்போது பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் கடந்த 4 மாதமாக எனக்கு தர வேண்டிய வட்டியை தேவநாதனும், அவர்களின் நிறுவனத்தினரும் சரியாக தரவில்லை. இதனால் எனது முதலீட்டு பணத்தை முழுமையாக தர வேண்டும் என்று கோரினேன். ஆனால் அவர்கள் தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்று கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளேன்.

நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ், பாஜ சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். எங்களுக்கு சந்தேகம் எல்லாம், எங்கள் முதலீட்டு பணத்தை அவர் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏன் என்றால், அவர் தேர்தலில் நிற்க முடிவு செய்த கடந்த 6 மாத காலத்தில் இருந்துதான் எங்களுக்கு தர வேண்டிய மாத வட்டி சரியாக தரப்படவில்லை. எனவே தேவநாதனை கைது செய்து விசாரணை நடத்தினால் என்னை போல் முதலீடு செய்தவர்களின் பணம் குறித்து முழு தகவல்கள் வெளியே வரும் என்றார்.

ஓய்வூதிய பணத்தை இழந்து தெருவில் நிற்கிறேன்
போராட்டத்தில் ஈடுபட்ட மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சதாசிவம் (68) என்பவர் கூறுகையில், நான் மற்றும் எனது மனைவி அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோம். எங்கள் ஓய்வூதிய பணம் ₹55 லட்சத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். முதலில் அவர்கள் முறையாக ஒவ்வொரு மாதமும் பணத்திற்கான முதிர்வு தொகையை அளித்து வந்தனர். ஆனால் தற்போது 6 மாதங்களாக எங்கள் பணத்திற்கான முதிர்வு பணத்தை தரவில்லை. இதுகுறித்து நாங்கள் ஒவ்வொரு மாதமும் நேரில் வந்து கேட்கிறோம். ஆனால் அவர்கள் அடுத்த மாதம் சேர்த்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். பிறகு ஒரு வழியாக பணத்திற்கு நிதி நிறுவனம் சார்பில் காசோலை கொடுத்தனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்தினால் பணம் இல்லை என்று திரும்ப வந்துவிட்டது. வயதான காலத்தில் எங்கள் ஓய்வூதிய பணத்தை முழுமையாக முதலீடு செய்து இழந்து விட்டோம். அதில் வரும் வட்டியை வைத்துதான் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். எங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுக்கு இந்த பிரச்னை தெரியாது. தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்றார்.

The post முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Milapur Financial Institution ,Devanathan ,CHENNAI, ,MAYLAPUR HINDU ,INSTITUTION ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...